ஆற்றில் போட்டுக்குளத்தில் தேடியதுps://youtu.be/2ZVpQ
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்னிசம்
அனேகதந்தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே
(இதன் தமிழாக்கம் கீழே)
வரை மகள் முகத்தாமரை மலர்விக்கும் ரவியாம்
வரைபுரை அத்தி முகத்தோன் வரம் வரையின்றி அருளும்
வரையில் ஐந்தாம் மறை வரை ஓர் மருப்பன் இரணிய
வரைக்கரையன் தருமகன் விரை கழல் என் சிரமிசையாமே
(வரை மகள் = மலை மகளான பார்வதியின்
முகத்தாமரை மலர்விக்கும் ரவியாம்= திருமுகத்தாமரை மலர்வதற்கு (மகிழ் வதற்கு) சூரியன் போன்றவரும்
வரைபுரை = மலைபோல (பருத்தவரும்)
அத்தி முகத்தோன்=யானை முகம் கொண்டவரும்
வரம் வரையின்றி அருளும்=எல்லை இல்லாத வரங்கள் அருள்பவரும்
வரையில் = (மேரு) மலையின் மீது
ஐந்தாம் மறை வரை = ஐந்தாவது வேதம் எனப்படும் மஹாபாரதத்தை எழுதியவரும்
ஓர்மருப்பன் = ஒரே ஒரு தந்தத்தை உடையவரும்
இரணிய வரைக்கு அரையன்= பொன் மலையான கைலாசத்தின் பதி சிவபெருமான்
தருமகன்=பெற்ற மகனான கணபதியின்
விரைகழல் அது = மணம் வீசும் திருப்பாதங்கள்
என் சிரமிசையாமே= என் தலை மீது படும்படி வணங்குகின்றேன்.
எளிமைக்கு மறு பெயர் வினாயகர் எனலாம். வினாயகரும் தன் தந்தையைப் போலவே எளிமை விரும்பி. எங்கும் முளைக்கும் அருகம் புல், எருக்கம்பூ இவற்றால் மகிழ்ந்து வேண்டிய வரம் தருவார். ஒரு கூறைகூட வேண்டாம்; குளக்கரை, ஆற்றங்கரை என்று ஒரு அரச மரத்தடியில் வைத்தாலும் ஆனந்தமாய் அமர்ந்து விடுவார். கல், உலோகம், மரம் இவற்றில்தான் என்றில்லை. கொஞ்சம் மஞ்சளோ, வெல்லமோ, பசும் சாணமோ போதும்; பிடித்து வைத்தால் பிள்ளையார் தான்.
அபிராமி பட்டர் கள்ள வாரணப் பதிகத்தில் சொல்வதுபோல் எந்தக்கடவுளை வணங்க வேண்டுமானாலும் முதலில் வினாயகரை வணங்கவேண்டும் என்பது மரபு. எனவே அந்த தெய்வம் வரம் தரும் முன்னே வினாயகரே வேண்டியதைக் கொடுத்து விடுவார். அதையும் பட்டர் சொல்கிறார் அல்லவா? நான் குறிப்பாக உன்னையே வணங்கவில்லை என்றாலும் நீ தானாகவே வந்து எனக்கு அருள் புரிவாய் என்று. அது தான் நடந்தது அப்பர், திரு ஞானசம்பந்தர், சுந்தரர், ஸோமாசி நாயனார் இவர்கள் விஷயத்திலும்.
சைவ சமயக்குரவர் எனப்படும் நால்வரில் காலத்தால் முதல்வரான (மாணிக்க வாசகர் எங்கிற கருத்தும் உண்டு) அப்பர் ஸ்வாமிகளுக்கு கணேசர் எவ்வாறு அருள் புரிந்தார் என்பதை முதலில் பார்ப்போம்.
அப்பருக்குத் திருத்தாண்டகம் எங்கிற 'பா' வகையில் அனேகப்பதிகங்கள் அவர் பாடி இருப்பதால், தாண்டகவேந்தர் எங்கிற பெயர் பெரியோர்களால் அளிக்கப்பட்டுள்ளது. நடராசர் என்பதைத் தாண்டவ வேந்தர் என்றும் சொல்லலாமே. அதனால் அடியேன் "தாண்டவ வேந்தரும் தாண்டக வேந்தரும்" என்ற தலைப்பில் அப்பர் ஸ்வாமிகளுடைய வரலாற்றை "யூ ட்யூபில்" தொடராக காணொலியாகக் கொடுத்து இருக்கிறேன். அத்தொடரின் 8,9 ஆவது பகுதியில் பல்லவ அரசன், திருநாவுக்கரசரை யானையை விட்டு இடற விட்ட படலம் சொல்லப் பட்டுள்ளது.
பொதுவாகத் தேவாரப் பாடல்களில் சிவபெருமானையும் அவரில் பாதியான பார்வதி தேவியையும் பற்றித்தான் வரும். திருக்காப்பு எனும் தொடக்கப் பாடல்கள் கூட மற்ற பக்தி இலக்கியங்களைப்போல கணபதியின்மீது பாடப்படவில்லை. ஞான சம்பந்தர் "தோடுடைய செவியன்" என்றும், சுந்தரர் "பித்தா பிறை சூடி" என்றும், அப்பரோ "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்றும் தொடங்கினர் என்பது யாவரும் அறிந்ததே. இடையிலும் கூட, தேவரப் பாடல்களில் வெகு குறைவாகவே கணபதி, சுப்ரமணியர் பற்றிக்குறிப்பு வரும். மஹேந்திர பல்லவன் யானையை திருனாவுக்கரசர் மீது ஏவிய பொழுது அந்த மத யானை அப்பருக்குக் கணபதியாகத் தரிசனம் தர, அவரும் அப்போது பாடிய பதிகத்தில் கணபதியைக் குறிப்பிடுகிறார். அந்தக்கணபதியான யானை பின் என்ன செய்தது என்றால் நாவுக்கரசரை மிதித்துக்கொல்வதற்குப் பதில், மதித்து வலம் செய்து, பின் தன்னை ஏவிய பாகர்களைத்துரத்த ஆரம்பித்தது. கொல்ல வந்தவர்கள் உயிருக்குப் பயந்து ஓடவேண்டியதாயிற்று.
சம்பந்தர் ஒரு க்ஷேத்திரத்தில், சிவாலயம் எங்கே இருக்கிறது என்று திகைத்து நிற்க, தன் தம்பி முருகனுக்கு முன்பே வள்ளியை மணக்க உதவினவராயிற்றே நம் வினாயகர். இப்போது, சம்பந்தராய் வந்திருப்பது அவர்தானே. அவருக்கு சிவாலயம் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டிக் கொடுத்ததால் இன்றும் "வழிகாட்டி வினாயகரா"க விளங்குகிறார்.
மேற்சொன்ன இருவருமே, திரு வீழி மிழலைப்பதியில் தங்கி இருந்த போது, பஞ்சம் ஏற்பட்டதால் தினமும் ஓரொரு பொற்காசு இறைவர் வீழிநாதர், வினாயகர் சன்னிதியின் பலி பீடத்திலேயே கொடுத்தருளினார். இன்றும் அவர் படிக்காசு வினாயகர் என்றே அழைக்கப்படுகிறார். காசு வைத்துப்பூஜித்துக் கொடுக்கும் வழக்கமும் நிலவுகிறது.
இவர்கள் விஷயமாவது பரவாயில்லை. சுந்தரரோ, ஸ்வாமியைக்கிண்டல் செய்து பாடியதோடு, வினாயகரையும் பெரிய வயிறு உடையவார், பெரும்தீனி தின்பவர் என்றே பாடியிருக்கிறார். என்றாலும் எத்தனை முறை அவருக்கு பிள்ளையார் அனுக்ரஹம் செய்திருக்கிறார்? விகடர் அல்லவா; ஹாஸ்யத்தை ரசிக்கத்தெரிந்தவர் ஆயிற்றே! திருமுருகன் பூண்டியில், சேரமான்பெருமாள் நாயனார் கொடுத்த பெரும் பொருள்களை எடுத்துச் செல்லும்போது, காட்டு வழியில் வேடுவர்கள், மரங்களில் பதுங்கி இருந்து பொருள்களைப்பறித்துக் கொண்டு, அடித்ததோடு, ஆடைகளையும் உருவிக்கொள்ள, சுந்தரருக்கு வந்ததே கோபம். வேடர்கள் மீது அல்ல, அதைவிட அதிகமாக, தன் தோழரான சிவபெருமான் மீது. அப்போது, அவர் அவ்வூர் சிவாலயம் அடையும் முன்பே பிள்ளையார் தோன்றி, வேடுவர்களாக வந்தது தன் தந்தையின் கணங்கள்தான் என்றும், தந்தையின் கட்டளைப்படியே அவர்கள் பொருள்களைப் பறித்த தையும் கூறி, அவரிடம் கோபம் கொள்ளவேண்டாம் என்று வேறு சிபாரிசும் செய்தார். ஆனால் பாபம், கணபதியின் தூது பலிக்கவில்லை. பின்னே, காவல் செய்ய வேண்டியவரே, திருடர்களை அனுப்பினால்..? திட்டித்தீர்த்து விட்டார் சுந்தரர். எப்படி என்பதை, மேலே உள்ள இணைப்பைச் சொடுக்கித் தெரிந்து கொள்ளலாம்.
திருக்கண்டியூரைத்தரிசித்து, காவிரியின் மறுகரையில் உள்ள திருவையாற் றுக்குச் செல்ல எண்ணினார் வன்தொண்டர். காவிரிக்கு, இவர் ஸ்வாமியைப் படுத்துகிறாரே என்று கோபம் போலும். பொங்கிப்ரவஹித்தாள். சுந்தரரா அஞ்சுவார்? உனக்காச்சா எனக்காச்சா என்று, இக்கரையில் இருந்தே ஓலம் கொடுத்தார்; அதாவது ஆபத்தில் இருக்கிறேன் உதவி தேவை என்று பொருள். அந்த ஓலத்தை, அக்கரையில் இருந்த விநாயகரே வாங்கி ஐயாறப்பருக்கு எதிரொலித்தார். இம்முறை அவர் தூது பலித்தது. உடனே பஞ்சதீஸ்வரர், காவிரி நதிக்குக்கட்டளை இட்டார், "சற்று விலகி வழிவிடு அம்மா" என்று. காவிரியும் இரண்டாகப்பிளந்து வழிவிடத் தம்பிரான் தோழரும், தோழரின் தோழரான சேரமான் பெருமாளும் நடத்தே கடந்து ஐயாற்றை அடைந்தார்கள்.
திருமுதுகுன்றத்தில் (விருத்தாச்சலம்) பதிகம் பாடிப் பன்னீராயிரம் பொன் பெற்றார் சுந்தரர். இவற்றைத் திரு ஆரூருக்கு எப்படி எடுத்துச்செல்வேன்; ஒன்று பளு, இரணடாவது பாதுகாப்பு இல்லையே; குண்டையூரில் கொடுத்த "சில நெல்லை" ( சிலை நெல் என்றிருக்க வேண்டும், நெல் மலை அல்லவோ ஸ்வாமி கொடுத்தார்!) திருவாரூரில் "அட்டித்தரப்பணித்தது" போல் செய்தால் தேவலை எனவும், இவர் கேட்டு ஸ்வாமி எதை மறுத்திருக்கிறார்? மறு பேச்சில்லாமல் அப்படியே ஆகட்டும், நீ இவற்றை இவ்வூர் மணிமுத்தா நதியில் கொட்டு, பின் உன் திருவாரூர் கமலாலயக் குளத்தில் எடுத்துக் கொள் என்றார். சுந்தரர் உடனே செய்தாரோ என்றால் அதுதான் இல்லை. திருமுருகன் பூண்டி அனுபவத்துக்குப்பின் சுந்தரர் சற்று அதிக கவனமாகி விட்டார். எதற்கும் மாற்றுப்பார்த்து விட்டுப் போடலாம், கமலாலயத்தில் இதே அளவு சுத்தப்பொன் கிடைக்கவேண்டுமே? யாரிடம் உதவி கேட்பது, பழமலைநாதரைச் சந்தேகித்து அவரிடமே உதவிகேட்க முடியுமா? இருக்கவே இருக்கிறார் விநாயகர், பூனைக்கும் தோழனாகப் பாலுக்கும் காவலாக!. விநாயகரும் வந்து தங்கத்தை உரைத்து (உரசி) மாற்றுப் பார்த்துச் சொக்கத்தங்கம் என உறுதி செய்தார். அதனால் "மாற்று உரைத்த விநாயக"ராக இன்றும் விளங்குகிறார். பின் என்ன நடந்தது? திருவாரூர் கமலாலயக் குளத்தில் கிடைத்ததா, அதுவும் மாற்று சற்றும் குறையாமல்? யூ ட்யூப் திரையில் காணலாமே (மேலே காணும் இணைப்பைச் சொடுக்கினால் அறியலாம்).
கருத்துகள்
கருத்துரையிடுக