கள்ளமில்லா வினாயகர் கடிதில் வந்து காப்பார்




வினாயகர் தோற்றம்


           வினாயகர் நம்மை விடுவதாக இல்லை. தன்னைப்பற்றிக்கூறுமாறு மறுபடி நம் முன் தோன்றுகிறார்.  

    அவர் எப்படித்தோன்றினார் என்பதற்கு வெவ்வேறு கதைகள் கூறப்படுகின்றன. பொதுவாக பார்வதி தேவி குளிக்கும்ப்போது காவலுக்குத்தன் உடம்பிலிருந்து அழுக்கை உருட்டி ஓர் உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்தாள். சிவபிரான் வந்து தங்கள் குழந்தை என்று அறியாமல் அவருடன் சண்டையிட்டுத் தலையை வெட்டி விட்டார். பார்வதி தேவி வந்து விளக்கிய பின் முதலில் தெரிந்த உயிரான யானையின் தலையை வெட்டி ஒட்ட வைக்க, வினாயகர் உயிர் பெற்று எழுந்தார் என்பது ஆகும். ஆனால் இப்படி ஒரு கதை எந்தப்புராணத்திலும் இல்லை என சமீபத்தில் தெரிய வந்தது. 

    ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் "காமேச்வர முக ஆலோக கல்பித ஸ்ரீ கணேச்வரா" என்று சொல்லப்பட்டு இருக்கிறது.  உலகத்தை எல்லாம் தொல்லைப்படுத்திக்கொண்டு இருந்த கஜமுகாசுரனை வதைக்க ஆனை பலம் கொண்ட ஒரு புத்திரன் வேண்டும் என்ற எண்ணத்தோடு அம்பாள் சிவ பெருமான் முகத்தை ஆசையோடு பார்க்க அவரும் அவளைப்பார்க்க, அச்சங்கமத்தி லேயே யானை முகம் கொண்ட கஜானனன் தோன்றி விட்டார். பின் அந்த கஜானனன், கஜமுகாசுரனைத்தன் தந்தத்தால் கொன்று முடித்தார் என்பது இதன் வரலாறு. கஜமுகாசுரனுக்கு ஆயுதங்களால் அழிவு கிடையாது என்பது வரம். எனவே இந்த ஏற்பாடு.

    இதை ஒட்டியேதானோ என்னவோ ஞான சம்பந்தரும் "பிடி அதன் உரு உமை கொள வெகு கரியது/ வடிகொடு தனது அடி வழிபடுமவர் இடர்/ கடி கணபதி வர அருளினன்  மிகு கொடை/ வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே" என்று உமாதேவி பெண்யானை கொள்ள அவள் மூலம் ஒரு யானையாகத் தன்னுடைய திருப்பாதங்களை வணங்குபவர் துன்பங்களைத்தீர்க்கும் கணபதி உருவாகும்படி அருள் புரிந்த சிவபெருமான் இருக்கும் இடம் இந்த தரும சிந்தனை உடையவர் உறையும் வலிவலம் என்னும் ஊர் என்று பாடுகிறார். 

    கணபதி அஷ்டோத்தரத்திலும், பார்வதி சரீர மல ஸம்பவாய நம: என்று வருகிறது. பார்வதியின் உடலில் அழுக்கா? இது என்ன அசம்பாவிதம் என்று முகம் சுளிக்கத் தோன்றும். பார்வதி ஆகிய சிவனின் சக்திக்கு மாயை என்றும் பெயர் உண்டு. அவள்தான் பரப்ரம்மமான சிவனை ஒரு திரைபோல மறைத்து உயிர்களை சத்வ, ரஜஸ், தமோ குணங்களைக்கொண்டு, ஐம்பொறிகளாலும், ஐந்து கரணங்களாலும், மனம், புத்தி, சித்தம்,அஹம்காரம் ஆகிய உள் கருவிளைக்கொண்டும் இந்தப்ரபஞ்சத் தோடு கட்டிச்சழற்றி விளையாடு கிறாள். பின் அவளே துன்பம் கொடுத்து உலகப்பற்றில் இருந்தும், பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்தும்  விடுபட வழியும் காட்டுகிறாள். கணபதி செயல் ஆசை, செயல்திறன் ஆகிய க்ரியா சக்தி. அதுதானே நல்ல தீய வினையாகிப் பிறவிக்குக் காரணமாகிறது. எனவே,அது பார்வதியின் (மாயையின்) மலம் (ஒதுக்க வேண்டிய, உலக விஷயங்களில் பற்று) எனப்படுகிறது.

தோற்றத்தின் விளக்கம்   

இவர் வினாயகர் என்று ஏன் அழைக்கப்ப்படுகிறார் தெரியுமோ? இவருக்கு மேல் ஒரு தலைவர் இல்லை என்று அதற்குப்பொருள். பிறந்த சற்றைக் கெல்லாம், தாயார் குளிக்கும்பொது உள்ளே நுழைய முனைந்த சிவனுடன் போரிட்டார், பின் திரிபுர சம்ஹாரத்தின் போதும் தன்னை வணங்காமல் சென்ற போது அவர் ரதத்தின் அச்சையே உடைத்தவர்.

    சரி. உடல் வலிமைதான் இப்படி என்றால் புத்தி சாதுர்யத்தை என்ன என்பது?  உலகைச்சுற்றி முதலில் வருபவருக்கு மாங்கனி என அறிவிக்க, தம்பியோ வெகு பலசாலி, மயில் வாகனம் உடையவன்; நமக்கோ பெரிய உடம்பு, அதைச் சுமப்பதோ மந்த கதியில் நடக்கும் மூஞ்சூறு, என்று உடனே சிந்தித்துத் தாயையும் தந்தையான சிவ பெருமானையும் சுற்றி வந்து நீங்களே உலகம் என்று கனியைப்பெற்று சபாஷும் வாங்கினவர் ஆயிற்றே.  அதற்குத்தான் சமயோசித புத்தி என்பது.

    தனக்கு மேல் ஒருவர் இல்லாத தலைவர் என்றால் அதற்கு உண்டான தகுதி என்ன. அதைக்காட்டுவதே அவர் தோற்றம்.  

    பெரிய காதுகள், ஒரு தலைவன் நிறைய கேட்க வேண்டும் என்பதை உணர்துகிறது. பெரிய வயிறு தலைவன் தனக்குக்கீழே ஊள்ளவர்களுடைய குறைகளை உள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். ஂமன்னிக்கும் குணம் வேண்டும் என்று உணர்த்துகிறது.  இத்தனை பெரிய உருவமுடைய கணபதிக்குச்சிறிய மூஞ்சூறு வாகனம். மூஞ்சூறு முதலில் ஒரு அசுரனாக இருந்தது. அனைவருக்கும் மிகுந்த துன்பம் கொடுத்து வந்தது. வினாயகர் அதன் கொட்டத்தை அடக்கித் தன் வாஹனம் ஆக்கிக்கொண்டார். ஒரு தலைவன் அரும் இடர்களைத் தன் சாதுர்யத்தால் சாதகமாக்கிக்கொள் பவனாக இருக்க வேண்டும் என்பதும், எத்தனை பெரியவராக இருந்தாலும் ஒரு மூஞ்சூறு சுமக்கும் அளவு லேசாக இருக்கிரார், அதாவது கர்வமே இல்லமல் இருக்கிறார், அதோடுகூட ஒரு எளிய மூஞ்சூரைக்கூட அலட்சியம் செய்யாமல் அதனையும் உதவி ஆக்கிக்கொள்கிறார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். 

     பிள்ளையார் இடதுகையில் மோதகம் வைத்திருக்கிறார். அதை எடுக்கப்  போகும்பானியில் அதை துதிக்கரம் தொட்டுக்கொண்டு இருக்கிறது. ஏன் தெரியுமா, அதைத்தன் பக்தராகிய நமக்குக்க்ப்டுக்கத்தயாராக இருப்பதைக் காட்டத்தான். மோதகம் நிலையான ஆனதமான மோட்சத்தைக் குறிக்கிறது. சில உருவங்களில் அமிர்த கலசம் வைத்திருப்பார். அதுவும் அதையே குறிக்கிறது. மேல் கரங்களில் அங்குசம், பாசம். பாசம் என்பது நமக்கு விருப்பம் ஏற்படுத்தி உலக விஷயங்களில் ஈடுபடுத்துவதையும், அங்குசம் கஷ்டம் கொடுத்து அதில் இருந்து விடுபட வைப்பதையும் காட்டுகிறது. அம்பிகையைத் தவிர் வினாயகருக்கே கற்பகம் என்ற பெயர் கூறப்பட்டுள்ளது. சிந்தமணி என்ற பெயரும் அதே போல் அவருக்கு மட்டுமே வழங்குகிறது. அப்படி பக்தர்கள் நிநைப்பதை உடநே அருள்பவர். 

வினாயகருக்கே உரிய சிறப்புப்பண்பு

    பிள்ளையாரிடம் இன்னொரு பெரிய பண்பும் இருக்கிறது. மனித வாழ்க்கையில் நவரசங்கள் வெகு முக்கியம். அது இல்லை என்றால் வாழ்க்கை சுவை அற்றதாகி விடும்.  அந்த நவ ரசங்களில் இன்றி அமையாதது எது என்றால் பெரும்பாலானோர் ச்ருங்காரம் என்பர்.  சிலர் வீரம், சாந்தம், கோபம் என்றெல்லம் சொல்லலாம். என்னைக்கேட்டால் ஹாஸ்யம் என்பேன்.  நினைத்துப்பாருங்கள். சிரிப்பு இல்லாத வாழ்க்கை நரகம் இன்றி வேறு என்ன?  பிள்ளையார் ஹாஸ்ய ரசத்துக்கே உரிய கடவுள். சிலர் மற்றவர்களைத்துன் புறுத்தித்தான் சிரிப்பார்கள். அவர்கள் அரக்க குணம் உள்ளவர்கள். அதனால்தன் போலும் ராட்சசர்களை எப்போதும்  அட்டஹாசச்சிரிப்புடன் காட்டுகிறார்கள். பிள்ளையார் அப்படி இல்லை. தான் கஷ்டப்பட்டாவது நம்மைச் சிரிக்க வைப்பார். அதற்கே அவர் அப்படி ஒரு உருவம் எடுத்து இருக்கிறார்.  அவருக்கு 'விகடன் (சிரிக்க வைப்பவன்)' என்றே பெயர்.  அதனால் தான் எஸ். எஸ். வாசன் தன் பத்திரிகைக்கு 'ஆனந்த விகடன்' என்று பெயரும் வைத்துப்பிள்ளையார் அதைக்கையில் வைத்துப்படிப்பது போல் படமும் அதன் அடையளமாக வைத்தார்.

ப்ரபல பக்தர்களும் வினாயகர் அருளிய விதமும்

    ஔவையார் மிகப்பெரிய வினாயகர் பக்தை என்பது அனேகமாக எல்லோரும் அறிவர். அதன் காரணம், அவ்வம்மையார் எழுதிய "வினயகர் அகவல்" என்னும் பனுவல், யோக சஸ்திரத்தை முழுமையாக அடக்கியது. அதில் வினாயகரே தனக்கு குருவாக வந்து இந்த யோகக்கலை முழுமையும் கற்றுத்தந்தார் என்கிறார். அந்தப்பாவில் அவர் சிவ பஞ்சாட்சரத்தை போதித்ததாகத்தான் சொல்கிரார்.  சரி, ஔவ்வையார் எப்படி கைலாசம் அடைந்தார் தெரியுமோ? அதற்கும் கணபதி தான் துணைபுரிந்தார்.  அந்தக்கதையை நீங்கள் மேற்கண்ட காணொலியில், சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரதில் அடியேன் சொல்லி உள்ளேன். கேட்டு மகிழவும்.

     பிள்ளையார் பல சிவனடியார்களுக்கு உதவி உள்ளார் என்பது பெரிய புராணத்தின் மூலம் தெரியவருகிற்து. ஓவ்வொன்றாகப் பார்க்கலாம். 


கருத்துகள்