இன்று நாம் ஸோமாசி நாயனார் என்பவருக்கு வினாயகர் எவ்வாறு அருளினார் என்று பார்க்கப்போகிறோம். ஸோமாசியா, பலகாரத்தின் பெயர் பக்தருக்கு எப்படி? அவர் யார், அவருக்கும் சுந்தர மூர்த்தி நாயனாருக்கும் எப்படித் தொடர்பு, நாயனார் என்றால் சிவபக்தர் அல்லவோ, வினாயகர் ஏன், என்ன அருள் புரிந்தார், சிவ பெருமான் இருக்கையில், என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறனவா? இவற்றுக்கு பதில், நீங்கள் "கட்டுண்டார் கயிலாயர் தோழமைக்கு பகுதி 40" ல் பார்த்திருக்கலாம். இல்லையென்றால், மேல் உள்ள இணைப்பைச் சொடுக்கி ("லின்கை" "க்ளிக்"] செய்து தெரிந்து கொள்ளலாம்.
இப்போது நம் கதா நாயகர் வினாயகர் ஆனதால் அவர் லீலையைக் காணலாம்.
ஸோமாசி நாயனார், இறைவன் தானே நேரில் வருவதாகச் சுந்தர மூர்த்தி நாயனாரிடம் சொல்லிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் யாகத்தைத்தொடங்கி வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. எந்த வழிபாட்டுக்கும், அதிலும் யாகம் போன்ற பெரிய நிகழ்ச்சிக்கு மன ஒருமைப்பாடு மிக அவசியம் அல்லவா? எல்லோரும் தம்மை மறந்து ஈடு பாட்டோடு யாகம் புரிந்து கொண்டு இருந்தார்கள். யாகத்தீயில் இடப்பட்ட நெய் மற்றும் பல திரவியங்களின் நறு மணம் பரவி ஒரு தெய்வீக சூழ் நிலை உருவாகியிருந்தது. திடீரென்று ஒரு துர் நாற்றம் காற்றை மாசு படுத்தியது. அது மட்டும் அல்லாது, தாரை தப்பட்டை (தகர டப்பா) ஒலி வேறு சூழ் நிலைக்குப் பொருத்தமில்லாமல், மந்திர சப்தத்தை மூழ்கடித்து ஒலித்தது. அதுவரை ஒரு ஆனந்தத்தில் திளைத்திருந்த பலரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, அலங்காரப்பந்தலின் உள்ளே ஒரு குறவர் கூட்டம் படு சுதந்திரமாக நுழைந்து கொண்டு இருந்ததைப்பார்த்து முகம் சுளிக்கமல் இருக்க முடியவில்லை. "நில்லுங்கள், நில்லுங்கள்" என்ற குரலை யாரும், அதிலும் குறிப்பாக அந்தக்கூட்டத்தின் தலைவனாகக்காணப்பட்ட, கட்டுமஸ்தான் உடல் கட்டுடைய கருத்த ஆளும், அவன் மனைவி என்று சொல்லாமலே புரியும் வண்ணம் உடன் நெருங்கி வந்த, ஒரு குழந்தையை இடுப்பிலும், ஒரு மண் கலயத்தைத்தலையிலும் சுமந்து வந்த அந்த அழகிய கருப்பாயியும் கேட்டதாகவே தெரியவில்லையே? மாறாக, ஏதோ இந்த உலகமே தங்களுக்குத்தான் சொந்தம் எங்கிற மாதிரி யாரையும் பொருட்படுத்தாத முகபாவத்தோடல்லவா வருகிறார்கள்? அந்தப்பெண்ணின் தலையில் இருந்த பானையில் இருந்து தான் அந்தப்புளித்த, குடலைப்புரட்டுகிற வாடை வருகிறது என்று கண்டுபிடிக்க வெகு நேரமாகிவிடவில்லை.ஜணௌ போதாக்குறைக்கு நாய்கள் வேறு, ஒன்றல்ல இரண்டல்ல, நான்கு! யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வேள்வியில் ஈடு பட்டிருந்த பல அந்தணர்கள் எழுந்து தூரம் தள்ளிப்போகவும், ஸோமாசியார் அவர்களை யாகத்தின் நடுவில் எழுந்து போக வேண்டாம், பெரும் தோஷம் சம்பவிக்கும் என்று எடுத்துச்சொல்லியும், அந்த நாற்றமும், அருவருப்பும் தாங்காது அவர்கள் அப்பால் போயினர்.
செய்வது அறியாது திகைத்திருந்த ஸோமாசியார் கண்ணில் அப்போதுதான் அந்தக்குறவர் தலைவன் கையில் பிடித்திருந்த கொழுக் மொழுக் என்று கொழுக்கட்டை மாதிரி இருந்த அந்தக் குழந்தை பட்டது. அது தன் தந்தையின் கையை விட்டு விட்டு அபிநயம் பிடித்து ஆட ஆரம்பித்து. தன் தந்தையைககாட்டி, இவர் யார் தெரியுமோ, வெறும் ஆசாமி அல்ல, சிவசாமியாக்கும் என்பதுபோல்
"காமனைக் கண்ணால் எரித்தவர், யானையை உரித்துப் போர்த்தவர்,
காலனைக்காலால் உதைத்தவர், சூலத்தைக்கையில் தரித்தவர்
வேலனை ஈன்றவர் வேதியர் சோதியர் பேதையோர் பாதியர்
ஞாலமும் விண்ணமும் யாவையும் ஆயின நாயகர் காண் (அவளோ)
எமக்கும் எம்பிக்கும், ஏன் உமக்கும், இவ்வண்டம் முழுமைக்கும் தன்னுள்
சுமக்கும் தாய், எந்தையை என்றும் பிரியாள், கருணை சுரக்கும் இணைமுலை
சுமக்கும் சிற்றிடையாள் ஏழுலகும் புரக்கும்பரிவுடையாள் விடையாள் தலை
சுமக்கும் கலயம் கள்ளல்லமுதமாம் உம்மைச்சோதிக்க வந்தார் இவரிருவர்."
நடனம் என்றாலே அபிநயத்திலும், முத்திரைகள், முகபாவத்திலும் செய்திகள் தெரிவிப்பதுதானே. இந்தப்பையனுக்குத் தான் கோமாளி, அதாவது விகடன் என்றே பெயர் ஆயிற்றே; இப்படி ஏதாவது செய்து மற்றவரை மகிழ்விப்பது வழக்கம்தானே என்று அவர்கள் இருவரும் கண்டு கொள்ளவில்லை போலும். யார் கண்டது? அவர்கள் இருவருமே அபிநய திலகங்களாயிற்றே, அவர்களே பிள்ளையைத்தூண்டியும் விட்டிருக்கலாம். அவர்கள் விளையாட்டையெல்லாம் யாரே அறிவர்? பிள்ளையைக்கிள்ளுவதும், பின் தொட்டிலை ஆட்டுவதும் அவர்களுக்கு விளையாட்டாயிற்றே?
ஸோமாசியார் வந்திருப்பது யார் என்பது அறிந்து புளகாங்கிதம் அடைந்தார். வினாய கருக்கும், சுந்தரருக்கும் மானசீகமாக நன்றி தெரிவித்தார், தம் கைகளாலேயே பரமேச்வர ருக்கு நேரடியாக பூர்ணாஹுதி கொடுக்கும் பெரும் பேறுத்தந்தமைக்காக. அவருடைய ப்ரார்த்தனை நிறைவேறியது மட்டும் இல்லை. கைலாச நாதரே தன்னோடு அவரைக்கைலாயத்துக்கே அழைத்தும் சென்று விட்டார். ஆமாம். இனி இந்த உலகத்தில் அவர் இருந்து ஆக வேண்டியது என்ன? மனிதப்பிறவி எடுத்ததன் பயனை அடைத்து விட்டாரே. இப்படி குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக சுந்தரருக்கு முன்பே கைலாயம் அடையும் பேறு வினாயகர் அடையாளம் காட்டியதால் அல்லவோ கிட்டியது ஸோமாசி நாயனாருக்கு?
கருத்துகள்
கருத்துரையிடுக