பிள்ளையாருக்கு எந்த மோதகம் பிடிக்கும்?

The nectar of Tiruppugazh  

 https//Tiruppugazh_nectar.blogspot.com



     

 
கணபதியை நாம் சாதரணமாக எண்ணிவிட்டோம் என நினைக்கிறேன்.  அவரைப்பற்றிச்சொல்லி முடியது. ஆரம்பித்து விட்டோம். எனவே நாம் அறிந்ததையும் சுருக்கமாகவே பார்ப்போம்.

    சென்ற பதிவில் பெரியபுராணத்தில் விநாயகர் திருவிளையாடல்கள் பற்றிச்சொல்லிக் "கட்டுண்டார் கயிலாயர் தோழமைக்கு" என்ற தலைப்பில் அடியேன் வெளியிட்ட "யூ ட்யூப்" பதிவின் 40வது பகுதிக்குப் பதிலாக "அன்னையின் வாக்கு அவளுக்கே அர்ப்பணம்" எங்கிற அபிராமி அந்தாதி பதிவைத் தவறுதலாக இணைத்து விட்டேன்.  அதுவும் வினாயகர் திருவிளையாடலாக எடுத்துக்கொள்கிறேன்.  என் தாய் தந்தையர் தாம் எனக்கு எல்லாம், முதலில் அவர்களைப்பற்றிக்கூறு என்று அப்படிச்செய்து விட்டார் என்று  கொள்ளலாம் அல்லவா?

    திருமுறை என்று சொல்லப்படும் தேவாரம் திருவாசகம் கிடைப்பதற்குக் காரணமே இந்தப்பிள்ளையார்தான்.  அனபாயச்சோழன் காலத்தில் வழக்கொழிந்து போயிருந்தன. அதாவது ஓதுவார் இன்றி மக்கள் மறந்து போய் இருந்தனர் இந்தப்பொக்கிஷங்களை.  ஏதோ ஒரு தலத்தில் ஒருவர் பாடக்கேட்ட மன்னன் சொக்கிப்போனான். மிகுதிப்பாடல்கள் இருக்கும் இடம் அறிய ஆவல் கொண்டான்.  எப்படி என்றுதான் தெரியவில்லை. சொக்கனாதரே துணை என்று  அவரை நம்பி இருந்தான்.  சொக்கனாதர் அவன் காதில் தேன் வார்த்தாற்போல் ஒரு செய்தி விழவைத்தார்.  ஒரு ஊரில் ( திரு நாரையூர், இன்றைய நாசியார் கோவில் என்று நினைவு) ஒரு பிள்ளை, தன் தந்தை வெளியூர் சென்றிருந்தபோது அவர் நித்தம் பூஜை செய்யும் வினாயகருக்குத், தன் தந்தையின் கட்டளைப்படிப் பூஜை செய்ததாம். அதன் அங்கமாக அவருக்குப் பொங்கல் நிவேதனம் செய்து, அவரைச்சாப்பிடும்படி வேண்டிற்றாம். அவரோ கல்லுளி மங்கன் (உண்மையில் அந்தப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத பொள்ளாப்பிள்ளையார்) மாதிரி இருந்தார். கெஞ்சிக்கெஞ்சிப்பார்த்த அந்தப்பிள்ளை -அவர் பெயர் நம்பியாண்டார் நம்பி என்பதாகும்- அழ ஆரம்பித்தது.  "உனக்குப்பொங்கல் ரொம்பப்பிடிக்கும் என்றுதானே அம்மா செய்து கொடுத்தாள். நீ சாப்பிடலைன்னா அப்பா என்னைத்திட்டுவாரே. சாப்பிடறயா,  இல்லை என் தலையை இந்தக்கல்லிலே முட்டிண்டு செத்துடட்டுமா" என்று அதுபோலவே கல்லில் தலையை முட்டிக்கொள்ள ஆரம்பித்தான்.  கல்லுப்பிள்ளையார் உள்ளம் கரைந்தார். "சாப்பிடறேன் நம்பி. இதுபோல் என்னை இதுவரை யாரும் உபசரித்தது இல்லை" என்று பொங்கல் முழுவதையும் உண்டு விட்டார்.  அது மாத்திரம் இல்லை. நாளை அவன் வருவதற்கும் ஏற்பாடு செய்து விட்டார். பின்னே, மிச்சம் மீதி இல்லை; யார் நம்புவார்கள் பிள்ளையார் சாப்பிட்டார் என்று?  அப்படித்தான் ஆயிற்று. இரவு தந்தை வந்தார். பூஜை சரியாகச்செய்யப்பட்டதா என்று கேட்டுத்தெரிந்து கொண்டார்.  ப்ரசாதம் வைத்திருப்பாள் என்று மனைவியைப்பார்க்க அவளோ தன் பிள்ளையைப்பார்க்கிறாள். " ஆமாம்பா, சொன்னா அம்மா நம்ப மாட்டேங்கறா. புள்ளையார் பூராப்பொங்கலையும் சாப்பிட்டுட்டார்." மலங்க மலங்க விழித்துச்சொன்னான் நம்பி.  அந்தக்காலம் தர்மத்திற்கென்றே மாந்தர் வாழ்ந்த காலம். அதிலும் வேதம் ஓதி, மந்திரபூர்வமாக ப்ராணப்ரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹத்தைத்தொட்டுப்பூஜிக்கிற பேறு பெற்ற சிவாச்சார்யார் குடும்பம், பொய் என்றால் தீ என்பது போல் பயந்த காலம். பொங்கல் இல்லை விஷயம், இப்போதே முதல் பொய்யிலேயே நிறுத்தா விட்டால் பொய் கூறுவது வழாக்கமாகி விடும் என்று அப்பா பயந்திருக்க வேண்டும். "சரி, காலையில் என்னோடு நீயும் வா, வினாயகருக்கு கொழக்கட்டை நெய்வேத்யம் செய்யலாம்" என்று, அது போலவே அழைத்தும் சென்றார். பூஜையின் மற்ற அங்கங்கள், ஸ்னானம், தூபம், தீபம் இத்யாதி முடிந்தன. மோதகம் எனப்படும் கொழுக்கட்டை நிவேதனத்துக்கு வைத்துவிட்டுத் திரை போட்டு மூடிக் காத்திருந்தனர் தந்தையும், தனயனும்.  வழக்கம் போலச்சற்று நேரம் கழித்துத் திரை விலக்கப்பட்டது.  பிள்ளையாரும் கொழுக்கட்டையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் அசையக்காணோம். தந்தைக்குத்தன் மகன் கூறியது பொய்யேதான் என்று ஊர்ஜிதம் ஆகி விட்டது. அதை அவர் பார்வையே மகனுக்கு உணரத்தி விட்டது. கண்களில் கரகரவென்று காவிரி பெருக்கெடுத்தாள். "நேற்றைக்குப்போலவே இன்றும் படுத்துகிறாயே. நானும் இன்றைக்கும் முட்டிக்கொள்கிறேன், ஆனால், நேற்றை விடப் பலமாக" என்று ஆரம்பித்ததுதான் தாமதம், மோதகங்கள் மள மளவென்று காணாமல் போயின.  நம்பியின் கண்களுக்குப்பிள்ளையார் தெரிந்தார், தகப்பனார் கண்களுக்கல்ல. இப்போது காவிரி அங்கே பெருகுகிறாள். ஒரு அசரீரி கேட்கிறது, " நம்பியின் நம்பிக்கை, குழந்தைத்தனமான திட விஸ்வாசம் இவையே மோதகத்தை விட நமக்கு இனிமை,  இதுவே நம்மை அவன் வசமாக்கிற்று. " அந்த நம்பியாண்டார் நம்பி வளர வளர பக்தியும் வளர்ந்தது. பிள்ளையாரோடு சம்பாஷிக்கும் அளவு அவரை நெருங்கி விட்டார். இதுவே சோழ மன்னன் காதில் பாய்ந்த தேன்.  திருமறைகள்- அப்பொழுது அந்தப்பெயர் வைக்கப்பட வில்லை,  தேவாரம் என்றே அழைக்கப்பட்டன- இருக்கும் இடம், பிள்ளையாரைக்கேட்டுச்சொல்ல ஒருவர் கிடைத்து விட்டார் என மன்னன் மகிழ்ந்தான். 

     நம்பியாண்டார் நம்பிக்கு ஆணவம் சற்றும் கிடையாது. எனவே ஆனைமுகவர் அவர் அழைத்தபோது தரிசனம் தருவார். அவரிடம் தேவாரப்பதிகங்கள் எங்குள்ளன எனக்கேட்டு, நம்பி அவர்கள் மன்னனுக்குச் சொன்னார்.  அவை, தில்லை, அம்பலவாணர் கோவிலில் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.  அரசன் மகிழ்ச்சியோடு சென்று அறையைத்திறக்க வேண்ட, தில்லை  மூவயிரவர் என்று அழைக்கப்படும் அந்தணர்கள் அனுமதி மறுத்தனர்.  அந்த ஓலைச்சுவடிகளை வைத்தவர்களே வந்து திறக்க அனுமதித்தால் தான் என்று சட்டம் பேசினார்கள்.  அவர்கள் இறை அடியார்களில் முதல்வர்களாக எண்ணப்படுவதால் மீறவும் முடியவில்லை.  மறுபடி, நம்பிடாண்டாரை அண்டினார் மன்னர்.  அவரும் தன் இஷ்டரான வினாயகரைத்துணை தேடினார்.  வினாயகரின் சமயோசித புத்தியைத்தான் நாம் முன்பே பார்த்தோமே. அவர் நம்பியாண்டாருக்கு வழி சொல்ல அவர் அதைச்சோழ அரசனுக்குச் சொன்னார்.

     சோழ அரசர், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் இவர்களுடைய திருவுருவச்சிலைகளை உரிய மரியாதைகளுடன் பல்லக்கில் எழுந்தருளச்செய்து,  தில்லை வாழ் அந்தணர்கள் முன்பு வந்து கதவைத் திறக்க வேண்ட , அவர்கள் மறுக்க முடியாது திறக்க வேண்டியதாயிற்று. 

   அதன்பின் அவை வரிசைப்படுத்தப்பட்டு திருமுறைகளாக வகுக்கப்பட்டு நமக்குக்கிடைத்துள்ளன. அது மட்டுமல்ல, அவற்றுக்குப்ப்பண் அமைக்கவும், திருஞான சம்பந்தருடன் தலங்கள் தோறும் சென்று அவர் பதிகங்களைத்தன் யாழில் இசைத்து வந்த திரு நீலகண்ட யாழ்ப்பாணர் வழி வந்த ஒரு பெண், இசையில் வல்லவளாக இருப்பதையும்  அவர் தம் இருப்பிடத்தையும் அறிவித்து அவர் மூலம் பண் அமைக்கவும் வழி செய்தார் வினாயகர்.  

        திருஞானசம்பந்தப்பெருமானுடைய சரித்திரம் அடியேன் சுருக்கமாக காணொலியாக வெளியிட்டுள்ளேன். அதன் இணைப்பு (லின்க்) இதோ.முருகன் அவதாரம்


     திருப்புகழ் அமுத்தை இசையோடு அருந்தி இருப்பீர்கள்; மிகுந்த பொருள் செறிவும், யோகம், வாசிகல்ப யோகம் என்று பல சாஸ்திரங்களையும் உள்ளடக்கியது. ஆதலால், அந்தப்பொருள் அறிய அரிய வாய்ப்பாக திருப்புகழமுதம் என்ற பெயரில் (ஆங்கிலத்தலைப்பு) ப்ளோக் உள்ளது. அடியேனும் சிலவற்றுக்கு என் சிற்றறிவுக்கு எட்டியவரை பொருள் கூறி உள்ளேன். நோக்கி ஆசிர்வதிக்க வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துகள்

கருத்துரையிடுக